சுற்றுலாத் துறை அலுவலகம் இல்லாத அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்!

அரியலூர், ஜன. 28: பல்வேறு சுற்றுலா மையங்கள் இருந்தும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கென தனியான சுற்றுலாத் துறை அலுவலகங்கள் இல்லாமல் இருப்பது சுற்றுலா ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. அரியலூர்
Updated on
2 min read

அரியலூர், ஜன. 28: பல்வேறு சுற்றுலா மையங்கள் இருந்தும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கென தனியான சுற்றுலாத் துறை அலுவலகங்கள் இல்லாமல் இருப்பது சுற்றுலா ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகிலுள்ள ஏலாக்குறிச்சியில் புனித  அடைக்கலமாதா திருத்தலம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஜயங்கொண்டம் வட்டத்தில், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பிரகதீஸ்வரர் திருக்கோயில், நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் நடைபெறும் திருமழப்பாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் போன்றவை புகழ் பெற்ற சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடிகோட்டை, மயிலூற்று அருவி, சாத்தனூர் கல் மரம் போன்றவையும் சுற்றுலா மையங்களாக விளங்கி வருகின்றன.

யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமை கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களைப் பார்வையிட கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் 7.86 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 15,511 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் 5,503 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாயும் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது.

இதேபோல, ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கலமாதா திருத்தலம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடிகோட்டை, மயிலூற்று அருவி போன்றவற்றுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இத்தகைய முக்கிய சுற்றுலா மையங்கள் இருந்தும், இதுவரையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கென தனியாக சுற்றுலா அலுவலகம் இல்லை, சுற்றுலா அலுவலர்களும் இல்லை. சுற்றுலாத் துறை சார்பாக அரியலூர் மாவட்டத்தில் ஏதேனும் நிகழ்வுகள் நடத்தப்பட்டால், தஞ்சை மாவட்டச் சுற்றுலா அலுவலர்தான் வந்து விழாவை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழும் விழாக்களுக்கும் திருச்சி மாவட்டச் சுற்றுலா அலுவலரே வர வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் தற்போது சென்னை, கன்னியாகுமரி, உதகை, கொடைக்கானல், திருச்சி, மதுரை, ராமேசுவரம், தருமபுரி, மாமல்லபுரம், சேலம், தருமபுரி, சிதம்பரம், தஞ்சாவூர், பூம்புகார், வேலூர், காரைக்குடி, திருவண்ணாமலை, கோவை ஆகிய 18 இடங்களில்தான் சுற்றுலா அலுவலகங்களும், வெளிமாநிலங்களில் 6 என மொத்தமாக 24 சுற்றுலா அலுவலகங்களும், 23 சுற்றுலா தகவல் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

"தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் துறைகளில் ஒன்றாகத் திகழும் சுற்றுலாத் துறையை மேலும் செம்மைப்படுத்தி, வருவாயை மேலும் அதிகரித்திட இதுபோன்ற சுற்றுலா மையங்களைக் கொண்டுள்ள மாவட்டங்களில் சுற்றுலா அலுவலகங்களைத் தொடங்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது' என்கிறார் அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த என். பாஸ்கர்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கலமாதா திருத்தலத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள  ரூ. 44 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணிகளை கண்காணிப்பதற்குரிய அலுவலர் தஞ்சை மாவட்டத்திலிருந்துதான் வர வேண்டிய நிலை உள்ளது. எங்கள் மாவட்டத்திற்கென சுற்றுலா அலுவலர் இருந்தால் நன்றாக இருக்கும்.

இரு மாவட்டங்களுக்கு என தனியாகச் சுற்றுலாத் துறை அலுவலகங்களை உருவாக்க போதிய நிதி ஆதாரம் இல்லாதபட்சத்தில், அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலா அலுவலகத்தை உருவாக்க வேண்டும். அதற்குரிய சுற்றுலா அலுவலர், இதர பணியாளர்களை நியமித்து, மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் வளர்ச்சிப் பணிகளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பாஸ்கர்.

இந்த இரு மாவட்ட மக்கள், சுற்றுலா ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com