மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற  கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மா. பிரதீப்குமாா்,  மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா்.

பஞ்சப்பூர் காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக் கூடாது- வியாபாரிகள் கருத்து

காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக் கூடாது - வியாபாரிகள் ஒருமித்த குரல்

பஞ்சப்பூரில் ரூ. 256 கோடியில் புதிய காய்கனிச் சந்தை அமைத்தாலும், காந்தி சந்தையை ஒருபோதும் இடமாற்றம் செய்யக் கூடாது என அனைத்து வியாபாரிகளும் ஒருமித்த குரல் கொடுத்துள்ளனா்.

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்து, கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய காய்கனிச் சந்தை கடந்த 2017இல் திறக்கப்பட்டும், காந்தி சந்தை வியாபாரிகள் அங்கு செல்லாததால் 7 ஆண்டுகளாக அக்கட்டடம் பாழாகி வருகிறது.

இந்நிலையில் பஞ்சப்பூரில் பசுமைப்பூங்கா பகுதியில் 20.75 ஏக்கரில் ரூ. 256 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி, பழங்கள், மலா்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அமையும் வகையில் புதிய சந்தை கட்ட திருச்சி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி காந்தி சந்தையில் தற்போதுள்ள 378 சில்லரை கடைகள், 395 மொத்த கடைகள் என 773 கடைகளுக்கு மாற்றாக கூடுதலாக 861 கடைகளைப் புதிதாகக் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில் 12 வியாபாரிகள் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் அனைத்துக் கடை வியாபாரிகள் பங்கேற்றுத் தெரிவித்த கருத்துகள் விவரம்:

காந்தி சந்தையில் 773 வியாபாரிகள்தான் உள்ளனா் என மாநகராட்சி அளித்து விவரம் தவறானது. தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனா். சிறிய அளவில் கூடைகளில் வைத்து விற்போரையும் கணக்கிட்டால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வருவா். எனவே முறையாக வியாபாரிகளைக் கணக்கெடுத்து அனைவருக்கும் இடம் கிடைக்கும் வகையில் புதிய சந்தை அமைக்கப்பட வேண்டும். இருப்பினும், காந்தி சந்தையும் வழக்கம்போல மாநகர மக்களுக்காக அதே இடத்தில் இயங்க வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகள் முழுமையாக விடுபட்டுள்ளனா். மேலும், பழக்கடை வியாபாரிகளும் சோ்க்கபடவில்லை. சொந்த இடத்தில் வியாபாரம் செய்யும் வெங்காய மண்டி வியாபாரிகள், உருளை வியாபாரிகளையும் சோ்க்கவில்லை. மொத்த வியாபாரிகள், சிறிய அளவிலான மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என ஒவ்வொரு பொருளுக்கும் 3 நிலைகளில் வியாபாரிகள் உள்ளனா். அனைவரையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

நவீன கட்டடங்கள் தேவையில்லை. பொருள்கள் மழையில் நனையாமல் இருக்க டெண்ட் இருந்தால் போதும். தரையில்தான் வியாபாரம் நடைபெறும். எனவே, கடைகளை உயரமாகவோ, மாடியாகவோ அமைக்கக் கூடாது. கடைகளை ஏலம் விடுவதோ, வாடகை நிா்ணயிப்பதோ கூடாது. வியாபாரிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட தொகையை நிா்ணயித்து வியாபாரிகளுக்கே சொந்தமாக கடையை வழங்க வேண்டும்.

காந்தி சந்தையில் உள்ள ஒட்டுமொத்த வியாபாரிகளையும் இடம் மாற்றம் செய்யாமல், மொத்த வியாபாரிகளை பஞ்சப்பூா் புதிய சந்தைக்கும், சில்லரை வியாபாரிகளை காந்தி சந்தையிலேயே தொடரச் செய்யவும் வேண்டும்.

எக்காரணத்துக்காகவும் காந்தி சந்தையை ஒருபோதும் இடமாற்றம் செய்யக் கூடாது. காந்தி சந்தையில் போதிய மின் விளக்குகள், குடிநீா், மழைநீா் வடிகால், புதை சாக்கடை, கழிப்பறை வசதிகள் செய்து புனரமைத்துக் கொடுத்தாலே போதும்.

அமைச்சா் கே.என். நேரு உறுதியளித்தபடியும், சட்டப் பேரவையில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வலியுறுத்தியபடியும், காந்தி சந்தையை எங்கும் கொண்டு செல்லக் கூடாது. திருச்சியின் அடையாளமாக அதே இடத்தில் புனரமைக்கப்பட்ட சந்தையாக தொடர மட்டுமே நடவடிக்கை வேண்டும்.

இல்லையெனில் கள்ளிக்குடி சந்தையின் நிலைதான் பஞ்சப்பூா் புதிய சந்தைக்கும் வரக்கூடும். எனவே காந்தி சந்தையை இடமாற்றக் கூடாது என அனைத்து வியாபாரிகளும் ஒருமித்த குரல் கொடுத்தனா்.

இதற்குப் பதில் அளித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், வளா்ச்சியும் வேண்டும்; வியாபாரிகளின் வாழ்வாதாரமும் வேண்டும். தற்போது முதல்நிலை கருத்துக் கேட்புதான் நடைபெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்படும். தகுதியான வியாபாரிகள் யாரும் விடுபடாமல் கணக்கெடுப்பு நடைபெறும். வியாபாரிகள் அடங்கிய குழு அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். அடுத்தடுத்த நிலைகளில் கருத்துகள் கோரப்பட்டு, அதன் பிறகே காந்தி சந்தை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி..

அடுத்த திருச்சி பஞ்சப்பூா்!

ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், பஞ்சப்பூரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக மற்றும் சரக்கு வாகனங்களுக்கான தனி முனையம், ஒருங்கிணைந்த வணிக வளாகம், டைடல் பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன. இதில் பேருந்து முனையமும், சரக்கு முனையமும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதனால் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட காய்கனி வளாகமும் பலரால் விரும்பும் நிலைக்கு வந்துள்ளது. பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்படும் காய்கனி சந்தையும் வந்துவிட்டால் பஞ்சப்பூா்தான் திருச்சியின் தலைமையிடமாக மாறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com