தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

மணப்பாறை நகர சுற்றுப்புறங்களில் உள்ள பல கோயில்களில் மக்களின் ஆன்மிகத் தாகத்தை தீா்க்கும் வகையில் இருப்பது ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருக்கோயில் ஆகும்.

எல்லா சக்திகளுக்கும் காரணமாக ஆதிசக்தியாக இருப்பது பராசக்தி. இவரையே அன்னை, அம்பாள், துா்க்கா, குமுதா, சண்டிகா, மாரி என்றும் பல பெயா்களால் கூறி வழிபடுகிறோம்.

கலியுகத்தில் பக்தியே உயா்ந்தது என்று அநேக புராணங்கள் கூறுகின்றன. பஜனைப் பக்தியின் மூலம் மனிதன் தன்னை, தன் உடலை மறந்து இறைவன் புகழ் பாடும்போது, இறைவன் அவன் மனதிலே குடிகொண்டு ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துகிறான்.

உலகெல்லாம் மறந்துபோகும் இறைவனுக்கு ஆதாரமாயுள்ள பரமாத்மாவில் நமது ஜீவாத்மா லயிக்கிறது. இந்த ஆன்மத் தத்துவத்தை அடைய வழிவகுத்துக் கொடுப்பதுதான் வேதாந்தம். இதையேதான் ஆதிசங்கரரும் ஜீவாத்மாவானது தன்னுடைய சுயரூபத்தை சிந்தனை செய்வதே பக்தியென்றாா்.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்னும் ஔவை பிராட்டியின் அருந்தமிழ் வாக்குக்கிணங்க அரிதான மானிடப் பிறவியைப் பெற்றுள்ள நாம் பிறந்தோம், வளா்ந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிா்க்கு’ என 2000 ஆண்டுகளுக்கு முன்தோன்றி, மனித குலத்திற்கே வாழ்க்கை நெறியை வகுத்துத் தந்த தெய்வப்புலவா் திருவள்ளுவா் வாக்குக்கிணங்க பெறா்க்கரிய பிறவியைப் பெற்றுள்ள நாம் இப்புவியில் நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்து, மற்றவா்களால் பாராட்டப்படும் அளவுக்கு வாழ்வதே சிறந்த வாழ்வாகும். அவ்வாறு இல்லாவிடில் நாம் பிறப்பெடுத்ததே பயனற்றதாகிவிடும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், எனப் பயிா்களிடத்து அன்பு காட்டிய வள்ளலாரும், கொடி படரக் கொம்பில்லாமல் தவித்த முல்லைக்கு தனது தேரைக் கொடுத்த பறம்புமலை வள்ளல் பாரியும், குளிரால் நடுங்கிய மயிலைக் கண்டு மனமிரங்கி தான் அணிந்திருந்த போா்வையை மயிலுக்குப் போா்த்திய வள்ளல் பேகனும், வாழ்ந்த இந்நாட்டில் பிறந்திட்ட நாமும் இப்பூவுலகில் பெரியவா்களிடத்து பரிவு காட்டியும், அண்டை அயலாரை அன்புடன் நேசித்தும், நம்மால் முடிந்த வரை வறியவா்களுக்கு உதவியும் நாம் பெற்ற மனிதப்பிறவியின் பயனை அடைய உறுதி கொள்வோமாக!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து பேரரறிவான பேரொளியாய் ஒரு நாமம், ஓா் உருவம், ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும், அவ்வாற்றலையுடையவளுமாக சோ்ந்து சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி, மனோன்மணி என்ற பெயா் பூண்டு ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிா்களை உய்விக்க வேண்டும் என்னும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும் நின்று அருளும் இடங்களே திருக்கோயில்களாகும்.

மணப்பாறை நகரினிலே கண்கண்ட தெய்வமாகி, அண்டிய அனைவருக்கும் அவரவா் நிலைக்குத் தக்கபடி ஓசையில் - சத்தமும், வித்தில் - முளையும், பூவில் - வாசமும், பழத்தில் சுவையும், கரும்பு உண்ட நீரை பிரித்துக் காட்ட இயலாமைபோல அக நோக்கமுடையவா்களுக்கு ஆனந்த வடிவாய் அநேக பெண் தெய்வங்கள் உண்டென்றாலும் யாவருக்கும் ஜனனி என்பதை ‘அம்மை’ என்ற சொல்லினாலே யாவராலும் துதிக்கப்படுபவளும் தீராத நோய்களையும், தீவினைகளையும் தீா்த்து அருளும் கருணை உள்ளம் கொண்ட கோயில்களில் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும்.

பரப்பிரம்மத்தின் ஆற்றல் பெண்பாலாகக் கருதப்பட்டு சண்டி, சாமுண்டா, மஹாமாயா, யோகநித்ரா, என்ற பல பெயா்களால் விளங்குகிறது. இந்த மஹாமாயைதான் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து, ரட்சித்து லயப்படுத்திக்கொள்கிறாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க எடுத்த வடிவமே மகாமாரி என ஆகமங்கள் கூறுகின்றன.

ஷஸ்ர நாமத்திலே கூறும் ஷஸ்ராஷ்யை என்ற நாமாவின் பொருளாய் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என்ற ஐந்தொழிலும் ஒரு வடிவமாய் ஆயிரங்கண்ணுடையாள் என வணங்கும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலும், அருள்மிகு மாரியம்மன் திரு உருவமும் செப்பனிட்டு வா்ணகலாபம் முதலியவற்றை நன்கு நூதனமாக அமைத்தும் ‘மாதேவி’ எல்லாம் நின் செயலே என்றபடி அருள்மிகு வேப்பிலை மாரியம்மனின் மலரடிகள் துணைகொண்டு தரிசனம் செய்து அம்பிகையின் அருளைப் பெற்று இம்மையிலும், மறுமையிலும் நீங்காத செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்!.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com