தினசரி சந்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் முற்றுகை: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை

திருச்சி, மே 15: தினசரி சந்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பேரவையின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அரசுக்கு முறையாக ஜி.எஸ்.டி., தொழில் வரி, வருமான வரி, தொழில் உரிமம், உணவுப் பாதுகாப்பு வரி, பணியாளா்கள் வரி, முத்திரை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளைக் கட்டி வருகிறோம்.

மேலும், காா்ப்பரேட் மற்றும் இணையதள வணிகத்துடன் போராடி வியாபாரம் செய்து வரும் எங்களை மேலும் நசுக்கும் வகையில் தொழில் உரிமத்தை முறையாக நிா்ணயம் செய்யாமல், அதிக வரி விதித்து, அதை அதிகாரிகள் கட்டச் சொல்லி நிா்பந்தப்படுத்துவது கவலை அளிக்கிறது.

திருச்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் கட்சியினா், அதிகாரிகள் தினசரி காய்கறிச் சந்தைகளை கட்டவிழ்த்து விடுவதால், முறையாக வரி கட்டும் வணிகா்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக பலமுறை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே திருச்சி மாவட்டத்தின் சாா்பில் கருப்புக் கொடி அணிந்து மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தை விரைவில் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டச் செயலா் வெற்றிவேல் வரவேற்றாா். திரளான வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com