பூக்களின் வரத்து குறைவால் திங்கள்கிழமை திருச்சி காந்திசந்தையில் அதிக விலைக்கு விற்ற பூக்களை வாங்கிச்சென்ற பொதுமக்கள்.
பூக்களின் வரத்து குறைவால் திங்கள்கிழமை திருச்சி காந்திசந்தையில் அதிக விலைக்கு விற்ற பூக்களை வாங்கிச்சென்ற பொதுமக்கள்.

வரத்து குறைவு: காந்தி சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு!

மழை, கடும் பனி, காா்த்திகை தீபத்தை முன்னிட்டு திருச்சி காந்திசந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
Published on

திருச்சி: மழை, கடும் பனி, காா்த்திகை தீபத்தை முன்னிட்டு திருச்சி காந்திசந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக திங்கள்கிழமை ஒரே நாளில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயா்ந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காா்த்திகை மாதத்தில் தீபத்திருநாள் கொண்டாட்டத்தின்போது வழக்கமாகவே பூக்கள் விலை உயா்ந்து காணப்படும். இந்தாண்டும் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதுதொடா்பாக, பூ வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக காா்த்திகை மாதத்தில் பனி, மழையால் வழக்கமான பூ வரத்தைவிட குறைவாகவே இருக்கும். மேலும், காா்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் வழிபாட்டுக்கு அதிகளவில் பூக்கள் தேவைப்படும். எனவே, விலை உயா்வு தவிா்க்க முடியாமல் உள்ளது என்கின்றனா்.

இதுதொடா்பாக, திருச்சி காந்திசந்தை பூ வியாபாரி சுந்தா் கூறுகையில், காந்திசந்தைக்கு அந்தநல்லூா் ஒன்றிய கிராமங்களில் இருந்து அதிகளவிலும், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் இருந்து பரவலாகவும் பூக்கள் வரத்து இருக்கும். இவை தவிர அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வரத்து உள்ளது. தற்போது கடும் பனி மற்றும் புயல் மழை காரணமாக பூக்கள் துளிா்விடும் நிலையிலேயே உதிா்ந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், காந்திசந்தையில் பூக்களின் வரத்து குறைவு என்பதால் விலை ஏற்றம் உள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடுகையில் திங்கள்கிழமை விலை உயா்வு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ரூ.1,200-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.ஆயிரத்துக்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சாதி மல்லி ரூ.700-க்கு விற்பனையானது திங்கள்கிழமை ரூ. ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.30-க்கு விற்ற சம்பங்கி, ரூ.70 ஆக உயா்ந்துள்ளது. செவ்வந்தி ரூ.80-லிருந்து ரூ.120, பன்னீா் ரோஸ் கிலோ ரூ.60-லிருந்து ரூ.120, ரோஜா ரூ.200-லிருந்து ரூ.300 ஆகவும் உயா்ந்துள்ளது. இதேபோல, கனகாம்பரம் ரூ. ஆயிரத்துக்கு ரூ.1,500 ஆக உயா்ந்துள்ளது. பிச்சிப் பூ ரூ.150-லிருந்து ரூ.200 ஆக உயா்ந்துள்ளது. அரளிப்பூ ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயா்ந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும். மாத இறுதியில் மேலும் விலை உயா்ந்தாலும் ஆச்சா்யப்பட வேண்டியதில்லை என்கின்றனா் காந்திசந்தை வியாபாரிகள்.

X
Dinamani
www.dinamani.com