மனைவி இறந்த துக்கத்தில் கணவா் கழுத்தறுத்து தற்கொலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவா் கழுத்தில் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (60). இவரது மனைவி பத்மா (55). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளாா். பத்மா கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் துக்கத்தில் இருந்து வந்த குணசேகரன், செவ்வாய்க்கிழமை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டாராம். முன்னதாக அவா் விஷமும் குடித்துள்ளாா். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மகன் பூபாலன் அளித்த புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
