மாவட்டத்தில் இதுவரையில் 5.50 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் படிவங்கள்: ஆட்சியா் தகவல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் இதுவரை 5.50 லட்சம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Published on

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் இதுவரை 5.50 லட்சம் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பணி முன்னேற்ற அறிக்கைகளை கேட்டறிந்தாா். வீடு தேடி படிவங்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் 23,68,968 எண்ணிக்கையில் மொத்த வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், இதுவரை 5,50,497 எண்ணிக்கையிலான வாக்காளா்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு, முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூா்த்தி செய்து வாக்காளா்களிடமிருந்து மீள பெறப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கிடும் பணியில் தொய்வு ஏற்படாவண்ணம் தொகுதிகளுக்கு கூடுதல் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com