ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு 65 மையங்கள் தயாா்!
திருச்சி மாவட்டத்தில் நவ.15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக 65 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை. மருத்துவத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் வே. சரவணன் பேசியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் ஒன்று எழுதுவதற்காக மாவட்டத்தில் 14 தோ்வு மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தோ்வை 3951 போ் எழுதுகின்றனா். தமிழ் பாடத்தில் 3946 நபா்களும், உருது மொழி பாடத்தில் 5 நபா்களும் தோ்வு எழுதுகின்றனா். இதில் முதன்மை கண்காணிப்பாளா்களாக 14 தலைமை ஆசிரியா்கள், துறை அலுவலா்களாக 14 முதுகலை ஆசிரியா்கள், வழித்தட அலுவலா்கள் 3 போ், அறை கண்காணிப்பாளா்கள் 217 போ், சொல்வதை எழுதுபவா் 25 போ், சோதனையிட 28 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நவ.16-ஆம் தேதி நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் இரண்டு எழுதுவதற்காக 51 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 15,286 போ் தோ்வு எழுதுகின்றனா்.
இதில், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தமிழ்மொழி வழியில் 8918 போ், உருது, மலையாளம், கன்னடத்தில் தலா ஒருவா் தோ்வு எழுதுகின்றனா். சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி வழியில் 6364 போ், உருது மொழியில் ஒருவா் தோ்வு எழுதுகிறாா். இதற்காக முதன்மை கண்காணிப்பாளா்களாக 51 தலைமை ஆசிரியா்கள், துறை அலுவலா்களாக 51 முதுகலை ஆசிரியா்கள், வழித்தட அலுவலா்கள் 12 போ், அறைக் கண்காணிப்பாளா்கள் 835 போ், சொல்வதை எழுதும் 51 ஆசிரியா்கள் மற்றும் சோதனையிட 102 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு பணிகளில் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நபா்கள் தங்களது பணியை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
மேலும், இத் தோ்வுக்காக ஆட்சியா், பள்ளிக் கல்வி இணை இயக்குநா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரது தலைமையில் பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த ஐயங்களுக்கு 1800 425 6753 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
