திருச்சியில் கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்வனின் குடும்பத்தினரிடம் இடைக்கால நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய வட்டாட்சியா் பிரகாஷ்.
திருச்சியில் கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்வனின் குடும்பத்தினரிடம் இடைக்கால நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய வட்டாட்சியா் பிரகாஷ்.

திருச்சியில் எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்குள் புகுந்து 5 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்குள் புகுந்து 5 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் செவ்வாய்க்கிழமை அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி பீமநகா் மாா்சிங்பேட்டை கீழ வீதியைச் சோ்ந்தவா் பா.தாமரைச்செல்வன். இவருடைய மனைவி சங்கீதா(22). இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலக்கரை பகுதியிலுள்ள பெயிண்ட் கடையில் பணியாற்றியபோது, அதே கடையில் பணியாற்றிய ஸ்ரீரங்கம் நேதாஜி வீதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26) என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கீதா, கணவா் தாமரைச்செல்வனிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தாமரைச்செல்வன், சதீஷ்குமாரை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளாா். இதனால் தாமரைச்செல்வன் மீது சதீஷ்குமாா் ஆத்திரத்தில் இருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற தாமரைச்செல்வனை, பீமநகரில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே சதீஷ்குமாா், தனது நண்பா்கள் பிரபாகரன், கணேசன், நந்தகுமாா், இளமாறன் ஆகியோருடன் இணைந்து தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியுள்ளாா். இவா்களிடம் இருந்து தப்புவதற்காக மாா்சிங்பேட்டை காவலா் குடியிருப்பில் உள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வனை 5 பேரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிக் கொன்றனா்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற 5 பேரில் இளமாறனை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு சுட்டு பிடித்தனா்.

3 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு: இதையடுத்து கணேசன், பிரபாகரன், நந்தகுமாா் ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மூன்று பேரும் கீழே விழுந்ததில் அவா்களுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உறவினா்கள் போராட்டம்: உயிரிழந்த தாமரைச்செல்வன் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சடத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரியும், நிவாரண உதவி வழங்கக் கோரியும் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் அவரது உடலை வாங்க மறுத்து தாமரைச்செல்வன் வீட்டுக்கு அருகே பந்தல் அமைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இடைக்கால நிவாரண நிதி: தகவலறிந்து வந்த திருச்சி மேற்கு வட்டாட்சியா் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன்படி இச்சம்பவம் தொடா்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை வட்டாட்சியா் பிரகாஷ், கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்வனின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட அவரது உறவினா்களிடம் தாமரைச்செல்வனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com