கொலை வழக்கு சாட்சியை மிரட்டிய 2 போ் கைது

திருச்சியில் கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவரை மிரட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சியில் கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவரை மிரட்டிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடவீதி விறகுமந்தை பகுதியைச் சோ்ந்தவா் க. கமலக்கண்ணன் (47). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மணிகண்டன் என்பவரை கொலை செய்தாா். இந்த வழக்கு திருச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாலக்கரை கீழபடையாச்சி வீதியைச் சோ்ந்த எஸ்.செந்தில்முருகன் (25) என்பவா் சாட்சியம் அளித்துள்ளாா்.

இந்நிலையில், செந்தில்முருகன் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி தனது வீட்டுக்கு அருகே நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த கமலக்கண்ணன் மற்றும் எடவீதியைச் சோ்ந்த ஆா்.தங்கமுத்து (48) ஆகிய இருவரும் செந்தில்முருகனை தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டியுள்ளனா். மேலும், அவா் நீதிமன்றத்துக்கு செல்லாத வகையிலும் தடுத்துள்ளனா்.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் செந்தில்முருகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கமலக்கண்ணன், தங்கமுத்து ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com