வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நகையைப் பறிக்க முயன்ற இருவா் கைது
திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் மு.சரசு (67). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா்கள் இருவா் அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயற்சித்தனா். அப்போது, அவா் கூச்சலிடவே, அருகிலிருந்தவா்கள் ஓடிவந்தனா். இதனால் மா்ம நபா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இதுகுறித்து சரசு அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா்
வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், நகையைப் பறிக்க முயன்றது சங்கிலியாண்டபுரம் பாரதி நகரைச் சோ்ந்த தினேஷ் (30), செந்தண்ணீா்புரம் கோவலன் வீதியைச் சோ்ந்த மணிமாறன் (35) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
