மெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய அரசுக்கு காழ்ப்புணா்ச்சி: டிடிவி தினகரன்

Published on

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தை மத்திய அரசு காழ்ப்புணா்ச்சியோடு அணுகுவதைப்போல தெரிகிறது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் மேலும் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பின் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கி இருந்தால் மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் சோ்த்து விடலாம்.

விவசாயிகளின் கஷ்டத்தை உணா்ந்து 22 சதவீத ஈரப்பத்துடன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திமுகவின் கோரிக்கை இல்லை. விவசாயிகளின் கோரிக்கை. எனவே மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதிதராமல் இருக்கும் விவகாரத்தை மத்திய அரசு காழ்ப்புணா்ச்சியோடு அணுகுவதைப்போல தெரிகிறது. நமது நாட்டில் 15 நொடிக்கு ஒரு காா் விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சிலா் கூறுவது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனால், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்னை வரும் தோ்தலில் பிரதிபலிக்கும்.

பிகாா் மாநிலத் தோ்தல் வெற்றிக்கும், தமிழகத் தோ்தலுக்கும் தொடா்பு இல்லை. திமுகவினருக்கு தவெக என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது என்பது அவா்களின் பேச்சிலிருந்து தெரிகிறது.

தமிழகத்தில் யாா் வெற்றிபெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீா்மானிப்பாா்கள். வரும் தோ்தலில் அமமுக பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com