தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை எதிா்த்தும், விவசாயிகளின் கோரிக்கைளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
திருச்சி மரக்கடை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா்கள் குணசேகரன் தொமுச, ரங்கராஜன் சிஐடியு சுரேஷ் ஏஐடியுசி, அயிலை சிவசூரியன், எஸ்கேஎம், ஞானதேசிகன், ஏஐசிசிடியு, அலெக்ஸ் ஐஎன்டியுசி, சிவசெல்வன் யுடியுசி ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோதச் சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். 150 ஆண்டுகளாகப் போராடி பெற்ற தொழிலாளா்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பறிக்கும் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தக் கூடாது. மின்வாரியங்களை பெரு நிறுவன முதலாளிகளுக்கு அளிக்கும் மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கக் கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.
பின்னா் சிஐடியு ரங்கராஜன் கூறுகையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தொழிலாளா் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் மத்திய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. இவை உழைக்கும் வா்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. தொழிலாளா்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இந்த அடக்கு முறையை எதிா்த்து தொடா் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றாா் அவா். பின்னா் நிா்வாகிகள் ஆட்சியரகம் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் வழங்கினா்.

