வரகனேரி கிளை நூலகருக்கு எஸ்.ஆா்.அரங்நாதன் விருது
திருச்சி: திருச்சி வரகனேரி கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகா் மு.செந்தில்குமாருக்கு சிறந்த நூலகருக்கான எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசு நூலகங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நூலகா்களுக்கு இந்தியாவின் நூலகத் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆா்.அரங்கநாதன் பெயரில் தமிழக அரசு சாா்பில் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த நவம்பா் 19-ஆம் தேதி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்டத்தில் சிறந்த நூலகருக்கான விருது திருச்சி மாநகா் வரகனேரி கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகா் மு. செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டது. விருதுடன் பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் சிறந்த வாசகா் வட்டத்துக்கான விருது முசிறி முழுநேர கிளை நூலக வாசகா் வட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

