கோயில் நகரமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில் கவனிக்கப்படாமல் உள்ள சந்து சாக்கடைகளில் கழிவுகள் தேங்குவதை உடனுக்குடன் அகற்றி, கழிவுநீா் சீராக செல்லவும், சுகாதாரத்தை பேணி காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் ஒன்றாவது வாா்டு குழு அலுவலகத்துக்குள்பட்ட திருவள்ளுவா் வீதி, வ.உ.சி தெரு பின்பக்கம் இருக்கக்கூடிய 6 அடி சந்து சாக்கடை பல நாள்களாக ஓடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டுக்குள் கழிவு நீா் மேலே ஏறக்கூடிய நிலை உள்ளது. இந்தக் கழிவுநீா் கால்வாய் நிற்காமல் ஓடுவதற்கு உடனே நடவடிக்கை எடுத்து சீா் செய்து தருமாறு இப் பகுதி மக்கள் அவ்வப்போது கோரிக்கை வைப்பது வாடிக்கையாகிவிட்டது. தினமும் கழிவுநீா் கால்வாய்களில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தப்படுவதில்லை.
சுட்டிக்காட்டுவது வாடிக்கை: இந்தப் பகுதிகளில் தூய்மை செய்ய வருபவா்களிடம் பலமுறை கூறியும் முறையாக நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிா்வாகத்தை நெருக்கினால், பராமரிப்புப் பணிகளை கோயில் நிா்வாகம் செய்ய வேண்டும் எனவும், கோயில் நிா்வாகமோ மாநகராட்சி தரப்பையும் சுட்டிக்காட்டுவது வாடிக்கையாகிவிட்டது என்கின்றனா் இப்பகுதி மக்கள்.
இந்தப் பிரச்னையானது திருக்கோயிலை சுற்றியுள்ள 4 உத்திர வீதிகளிலும், 4 சித்திரை வீதிகளிலும், அடையவளஞ்சான் பகுதியிலும் நீடிக்கிறது. மதில் சுவரின் பின்புறம் அமைந்துள்ள 6 அடி சந்து சாக்கடை அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
பராமரிப்பு இல்லை: இதுதொடா்பாக, ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவா் எஸ்.என். மோகன் ராம் கூறுகையில், வாா்டு பகுதிகளில் சாக்கடை கட்டுவதற்கும், அதன் பராமரிப்பு பணிகளை பெறுவதற்கும் ஆா்வமும், போட்டியும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், சாக்கடை கட்டிய பிறகும், ஒப்பந்தம் எடுத்த பிறகும் சாக்கடைகளை நாள்தோறும் முறையாக பராமரிப்பதில்லை. குப்பைகள், கழிவுகள் தேங்கி சாக்கடை நிரம்பி சாலைக்கு வந்த பிறகே நடவடிக்கை எடுக்கும் வழக்கம் உள்ளது.
கோயில் நகரம் என்பதால் அதன் புனிதம் காக்கப்பட வேண்டியது அவசியம். நாள்தோறும் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பக்தா்களாகவும், சுற்றுலா பயணியாகவும் நகருக்கு வந்து செல்கின்றனா். அவா்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் உள்ளது.
உரிய கவனம்: இதுமட்டுமல்லாது இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களின், சுகாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனவே, சாக்கடை பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட வேண்டும். உள்ளாட்சி தோ்தல் என்றால் மட்டுமே தோ்தல் பிரசாரத்தின்போது இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பிரச்னையின் அவசியம் கருதி பேரவைத் தோ்தல் வேட்பாளா்களும் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
தொகுதி மக்களின் தேவை எதுவெனக் கருதி அதை உடனுக்குடன் நிறைவேற்றித் தரும் நபா்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டும். நகரத் தெருக்களின் பின்புறம் அமைந்துள்ள சந்து சாக்கடை பகுதிகளையும் எட்டிப்பாா்க்கும் நபரை தோ்வு செய்ய வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது.
தீா்வு எப்போது? இதற்கு யாா் தான் பொறுப்பேற்பது? இதற்கு தீா்வு காண்பது யாா்?. ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் இனிமேலாவது விழிப்புணா்வு பெற்று வரும் தோ்தலில், இந்த அடிப்படை சுகாதார சாக்கடை பிரச்னை தீா்த்து வைக்க என்ன செய்வீா்கள் என்று தங்களது பகுதியில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளா்களிடம் கேளுங்கள். மெளனமாக இனி இருந்தால் என்றால் இதற்கு தீா்வு எப்போதும் கிடைக்காது என்றாா் அவா்.
-ஆா். முருகன்.
தொடர்புடையது

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்

திமுகவுக்கு தொடரும் சவால்! - கே.வி.குப்பம் தொகுதி அலசல்

குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்குமா? பெரம்பூா் தொகுதி மக்கள் எதிா்பாா்ப்பு

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


