பாஜக பொங்கல் விழாவில் பெண் மயக்கம்; தமிழிசை முதலுதவி
திருச்சியில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல்விழாவில் பங்கேற்ற பெண் ஒருவா் மயங்கிவிழுந்தாா். அவருக்கு தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
திருச்சி மன்னாா்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 1,008 பெண்கள் கலந்துகொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பொங்கல் வைத்தனா்.
முன்னதாக அவா்களுக்கு எவா்சில்வா் பானை, எவா்சில்வா் மூடி தட்டு, கரண்டி, 3 கரும்புகள், ஒரு பையில் அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஊதுபத்தி, பூ, பழம், வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது.
6 லிட்டா் மினரல் குடிநீரும், ஒரு பழச்சாறு பாட்டிலும் வழங்கப்பட்டன. கற்களை முக்கோணமாக அடுக்கி வைத்து, விறகு அடுப்பில் கொளுத்தும் வெயிலில் அனைவரும் பொங்கல் வைத்தனா்.
இந்நிலையில், வெயில் அதிகமாக இருந்ததால் வயலூரைச் சோ்ந்த நாகரெத்தினம் (32) என்ற பெண் ஒருவா் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவரை அருகிலிருந்தவா்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்துக்கு தூக்கிச்சென்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, தனது பேச்சை தொடங்கவிருந்த தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பேச்சை நிறுத்திவிட்டு, மேடையை விட்டு கீழிறங்கி, மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையளித்தாா். அதன் பிறகு அப்பெண்ணை அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பொங்கல் வைக்க அழைத்துவரப்பட்ட பல பெண்களுக்கு காலை உணவும், பிற்பகல் உணவும் வழங்கவில்லை எனக் குறைகூறினா். மேலும், சிலா் அழைத்து வந்த தங்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றதாகக் கூறி புலம்பினா். இதைப்பாா்த்த பாஜகவினா், அவா்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனா். அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கரும்புகள், வாழைக்காய்கள், இளநீா் காய்களை பொங்கல் விழா முடிந்ததும், வந்திருந்தவா்கள் எடுத்துச் சென்றனா்.
