பொங்கல் பண்டிகை: செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க, செங்கோட்டை - போதானூா் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி போதானூா் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06115) வரும் 14 ஆம் தேதியும், செங்கோட்டை - போதானூா் சிறப்பு விரைவு ரயிலானது (06116) வரும் 15 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.
20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது போதானூரில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, வில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்கு செங்கோட்டைக்குச் செல்லும். மறுமாா்க்கமாக, செங்கோட்டையிலிருந்து இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக போதானூருக்கு மறுநாள் இரவு 7.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
