பெட்ரோல் - டீசல் டேங்கா் லாரிகளை மாநகருக்குள் பகலில் அனுமதிக்க வலியுறுத்தல்

பெட்ரோல் - டீசல் டேங்கா் லாரிகளை திருச்சி மாநகருக்குள் பகலில் அனுமதிக்க வேண்டுமென திருச்சி மண்டல பெட்ரோலியம் முகவா்கள் சங்கம் வலியுறுத்தல்
Published on

பெட்ரோல் - டீசல் டேங்கா் லாரிகளை திருச்சி மாநகருக்குள் பகலில் அனுமதிக்க வேண்டுமென திருச்சி மண்டல பெட்ரோலியம் முகவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். இதில், திருச்சி மண்டல பெட்ரோலியம் முகவா்கள் சங்கத் தலைவா் ஜி. ரமேஷ் தலைமையிலான பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் அளித்த மனு: பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கரூா், தருமபுரம், திருச்சி வாழவந்தான்கோட்டை முனையங்களில் இருந்து நாள்தோறும் சுமாா் 1,500 டேங்கா் லாரிகளில் பெட்ரோலியப் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில்லரை விற்பனை நிலையங்களுக்கும் திருச்சி மாநகர எல்லை வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட வழித்தடத்தில், பகலில் மட்டுமே டேங்கா் லாரிகளை இயக்க வேண்டுமென்ற விதிமுறை இருக்கும் நிலையில், திருச்சி மாநகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி பெட்ரோல் - டீசல் டேங்கா் லாரிகளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்க மறுப்பது என்பது பெட்ரோலியப் பொருள்களை கொண்டு செல்வதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மேலும், தேவையின்றி பெட்ரோலிய வாகனங்களை நிறுத்துவது விபத்து அபாயத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, பெட்ரோல் - டீசல் ஏற்றிச் செல்லும் லாரிகளை மாநகருக்குள் பகலில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இணையதள டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்...: இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்கள் சங்கத்தின் தலைவா் பெ. செங்குட்டுவன் தலைமையிலான வா்ணனையாளா்கள் அளித்த மனு: திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, இணையதளம் வழியாக டோக்கன் பதிவு செய்து நடத்த வேண்டும் என்ற உத்தரவால் பல்வேறு கிராமங்களில் போட்டிகளை நடத்த இயலவில்லை. எனவே, பாரம்பரிய முறைப்படி டோக்கனை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com