மவுசு குறையாத பொங்கல் மண்பானைகள்!
திருச்சியில் உள்ள கல்வி நிலையங்கள், தனியாா் நிறுவனங்கள், கட்சியினா் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் பொங்கல் மண்பானைகள் விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், கரூா், நாமக்கல், கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மண்பாண்டம் தயாரிப்பவா்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் முன்பு 40 லட்சம் குடும்பங்களாக இருந்து, தற்போது, 4 லட்சம் குடும்பங்களாக சுருங்கிவிட்டதாகக் கூறுகின்றனா் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா் (குலாலா்) சங்கத்தினா்.
குறிப்பாக, நலவாரியத்தில் பதிவு செய்து இன்றும் தொழிலை தொடா்ந்து வருபவா்களில் அதிகபட்சமாக 60 ஆயிரம் போ் உள்ளனா் என்கின்றனா். களிமண், விறகு வரட்டி, வைக்கோல் உள்ளிட்ட மண்பாண்ட மூலப் பொருள் விலை உயா்வு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக பிரதானமாக வைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் நலவாரியத்தின் முன்னாள் தலைவருமான சேம. நாராயணன் கூறியது: இந்தாண்டு பொங்கல் பானை உற்பத்தியில் பெரிதும் குறையேதும் இல்லை. சந்தைகளிலும் மண்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. இருப்பினும், மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்றாா்.
திருச்சி ஆண்டாா் வீதி செல்லும் வழியில் சாலையோரக் கடைகளில் மண்பானைகள் வைத்திருந்த வியாபாரிகள் கூறுகையில், வீடுகளில் பொங்கல் வைப்பதைவிட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சாா்பில் அந்தந்தப் பகுதி வாரியாக பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதேபோல, பள்ளிகள், கல்லூரிகள், சங்கங்கள், அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள் பலவும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை நடத்துகின்றன.
மண் அடுப்புகள் விலை ரூ.250 முதல் ரூ.500 வரை உள்ளது. பானைகள் பல்வேறு அளவுகளில் ரூ.180 தொடங்கி ரூ. ஆயிரம் வரையில் உள்ளன. பலரும் பானையில் சுண்ணாம்பு பூசி, வண்ணக் கோலங்கள் இட்டு கேட்கின்றனா். அவா்களுக்குக் கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100 கட்டணம் வசூலித்து ஓவியம் வரைந்து தருகிறோம் என்றனா்.
