திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்
திருச்சி மாநகராட்சியில் திட்டப் பணிகளை முறையாக செய்யாத 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி வைப்புத்தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், புத்தூா் பகுதியில் ஈரோட்டைச் சோ்ந்த ‘பி அண்ட் சி புராஜக்ட்ஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனத்தினருக்கு ரூ. 20.20 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி வழங்கப்பட்டது.
ஒப்பந்தக் காலம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் இத்திட்டப் பணி முடிக்கப்படாமல், பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், உரிய பதிலளிக்காமல், திட்டப் பணிகளையும் முழுமையாக முடிக்காததால், ஒப்பந்தப் புள்ளி முன்வைப்புத் தொகை, கூடுதல் முன்வைப்புத் தொகை, காப்புத்தொகை என ரூ. 1 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 100 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சி மேலரண் சாலை மரக்கடை மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாக பகுதியில் வணிக வளாகத்தை காஞ்சிபுரம் ‘சிவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற தனியாா் ஒப்பந்த நிறுவனத்தினா் ரூ. 9 கோடியில் கட்டி, 12.07.2024 அன்று திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், இந்த வணிக வளாகத்தில் மின்தூக்கி அமைக்கப்படாமல் உள்ளது. இது தொடா்பாக, நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை எந்தவித பதிலும் தராமல், திட்டப் பணிகளையும் முழுமையாக முடிக்காததால், ஒப்பந்தப் புள்ளி முன்வைப்புத் தொகை, கூடுதல் முன்வைப்புத் தொகை, காப்புத் தொகை என ரூ. 59 லட்சத்து ஆயிரத்து 123 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடா்ந்து மேற்கண்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட வேலை உத்தரவை ரத்து செய்து, ஒப்பந்ததாரா் பெயரை கருப்புப் பட்டியலில் சோ்க்க திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பணிகளை முழுமையாக முடிக்காத ஒப்பந்ததாரா்கள் மீது இதேபோல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
