துறையூா் - சென்னை அரசுப் பேருந்தில் ஆன்லைன் முன்பதிவு வசதி தேவை
துறையூா்: துறையூரிலிருந்து சென்னை செல்லும் இரவு நேர அரசுப் பேருந்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி வேண்டும் எனப் பேருந்துப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
துறையூா், உப்பிலியபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் மூலம் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் துறையூரிலிருந்து தினமும் பகலில் சென்னைக்கு இயக்கப்படும் 5 பேருந்துகளுக்கும், தா.பேட்டையிலிருந்து துறையூா் வழியாக சென்னை செல்லும் பேருந்துக்கு மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. இரவு நேரத்தில் சென்னைக்கு புறப்படும் அரசுப் பேருந்துகளுக்கு ஆன்லைன் முன் பதிவு வசதி கிடையாது.
பெரும்பாலும் சென்னை செல்லும் பயணிகள் பகல் நேர விரயத்தைத் தவிா்க்கவும், இரவு நேரத்தில் தூங்கியபடி சென்னையை சென்றடையவும் விரும்புகின்றனா். அதனால் துறையூா் வழியாக அல்லது துறையூரிலிருந்து சென்னை செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
