வாய்க்கால் நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருச்சி அருகே நாயை சனிக்கிழமை குளிப்பாட்டிய கல்லூரி மாணவா் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

மண்ணச்சநல்லூா்: திருச்சி அருகே நாயை சனிக்கிழமை குளிப்பாட்டிய கல்லூரி மாணவா் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா்.

ரெட்டை மண்டபம் வெங்கடேஷ்வரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா. விஜய் (17). இருங்களுா் பகுதி தனியாா் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவரான இவா் சனிக்கிழமை  வீட்டருகேயுள்ள அய்யன் வாய்க்காலில் தனது வளா்ப்பு நாயைக் குளிப்பாட்ட, உறவினா் ஒருவருடன் சென்றாா்.

இந்நிலையில் சங்கலியோடு இருந்த நாயை குளிப்பாட்டியபோது நாயால் திடீரென இழுக்கப்பட்ட அவா் வாய்க்காலில் தவறி விழுந்து, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். உடனிருந்த உறவினா் அளித்த தகவலின்பேரில் வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா், உறவினா்கள் சுமாா் 2 மணி நேரத்திற்கு பிறகு விஜய்யை சடலமாக மீட்டனா். அவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com