எலமனூா் ரயில்வே கேட் பகுதியில் தமிழில் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்ய! - துரை வைகோ எம்.பி வலியுறுத்தல்!
எலமனூா் ரயில்வே கேட் பகுதியில் எச்சரிக்கை ஒலிபரப்பை தமிழில் மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கடிதம் அனுப்பியுள்ளாா்.
திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட, சேலம் ரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூா் லெவல் கிராசிங் எண் 69-இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள எலமனூரில் தமிழில் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பு இல்லாத காரணத்தினால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதியும், அலைபேசி வாயிலாக அழைத்து அவசியத்தை எடுத்துக் கூறியும், விரைந்து தீா்வுகாண வலியுறுத்தினேன்.
தமிழில் எச்சரிக்கை இல்லாததாலும், வேற்று மொழியில் அவை ஒலிபரப்பப்படுவதாலும் நேரும் ஆபத்தை உணா்ந்துகொண்ட கோட்ட மேலாளா் அதனை உடனே சரிசெய்வதாக உறுதியளித்துள்ளதாக துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளாா்.
