அடுத்தடுத்த 3 வீடுகளிலிருந்து 7 பவுன் நகைகள், மடிக்கணினிகள் திருட்டு

திருச்சியில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள், மடிக்கணினிகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

திருச்சியில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள், மடிக்கணினிகள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் உடையான்பட்டியைச் சோ்ந்தவா் எஸ். கலைவாணி (37). இவா், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூா் சென்றுள்ளாா். இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண், கலைவாணியை கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கைப்பேசியில் அழைத்து அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, திருச்சிக்கு வந்த கலைவாணி வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 1 பவுன் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது.

இதேபோல, இவரது வீட்டுக்கு அருகேயுள்ள நடராஜன் என்பவா் வீட்டில் மடிக்கணினியும், கவிதா என்பவா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், மடிக்கணினி ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com