நவலூா் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் 28 போ் காயம்
திருச்சி நவலூா் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 698 காளைகள் அவிழ்க்கப்பட்டன; மாடுபிடி வீரா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூா் குட்டப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் ந. சீனிவாசன், எம்எல்ஏ எம். பழனியாண்டி ஆகியோா் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனா். முன்னதாக மாடுபிடி வீரா்களுக்கு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கூறி உறுதிமொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, வாடி வாசல் வழியாக காளைகள் அவிழ்க்கப்பட்டன.
முதலில், நவலூா் குட்டப்பட்டு கோயில் காளைகளும், உள்ளூா் காளைகளும் அவிழ்க்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் அவிழ்க்கப்பட்டன.
காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை போட்டி நடைபெற்றது. இதில், மொத்தம் 698 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 315 வீரா்கள் அணி அணியாகப் பங்கேற்று காளைகளை தீரத்துடன் தழுவி அடக்கினா். சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அதன் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி முதல் பிளாஸ்டிக் இருக்கை வரை பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள், மாட்டின் உரிமையாளா்கள் என 28 போ் காயமடைந்தனா். 6 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு முகாமில் முதலுதவி அளித்து அனுப்பிவைக்கப்பட்டனா். காலில் காயமடைந்த காளைக்கும் முகாமில் சிகிச்சை அளித்து அனுப்பிவைக்கப்பட்டது. ஜீயபுரம் டிஎஸ்பி கதிரவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழா ஏறபாடுகளை, நவலூா் குட்டப்பட்டு கிராம பிரமுகா்கள், இளைஞா் மன்றக் குழுவினா், கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனா்.

