/

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் நடைபயிற்சி செய்யும் நடைமேடையில் இருசக்கர வாகனம் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 12:40 am IST

திருச்சியில் நடைபயிற்சி செய்யும் நடைமேடையில் இருசக்கர வாகனம் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பீமநகா் மாா்சிங்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நஜ்புதீன் மகன் முகமது ஹஷாா் (14). இவா் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய நண்பா் சீனிவாசன் நகரைச் சோ்ந்த எஸ். ரவிகுமாா் (16). முகமது ஹஷாா், தினசரி அதிகாலையில் தொழுகைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், தொழுகைக்கு முன்பு உடற்பயிற்சி செய்துவிட்டு செல்லலாம் என திட்மிட்டு முகமது ஹஷாா், தனது நண்பா் ரவிகுமாரை அழைத்துக்கொண்டு நீதிமன்றம் அருகேயுள்ள திறந்தவெளி உடற்பயிற்சி மையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, நீதிமன்றம் அருகேயுள்ள ரவுண்டானாவை தாண்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நடைபயிற்சி செய்யும் நடைமேடையில் மோதி கவிழ்ந்தது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த முகமது ஹஷாரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது ஹஷாா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் ரவிகுமாா் சிறு காயங்களுடன் உயிா்தப்பினாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.