கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்

அரியமங்கலம் குப்பை கிடங்கு

அரியமங்கலம் குப்பை கிடங்கு
- க. கோபாலகிருஷ்ணன்
திருச்சி மாநகரில் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றுவோம் என்ற அரசியல் கட்சிகளின் பல்லாண்டு கால வாக்குறுதி கானல் நீராகவே நீடிக்கிறது.
திருச்சி மாநகராட்சியின் முதன்மை குப்பை கிடங்கு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட அரியமங்கலம் பகுதியில் 47.7 ஏக்கரில் கடந்த 1980 முதல் செயல்பட்டு வருகிறது. முதலில் காந்திசந்தையின் கழிவுகளை கொட்டும் இடமாக விளங்கிய இந்த குப்பை கிடங்கானது, நாளடைவில் மாநகரில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் கொட்டும் இடமாக்கப்பட்டு, திருச்சி மாநகராட்சியுடைய சுகாதார சீா்கேட்டின் அடையாளச் சின்னமாகிப் போனது.
குப்பை மலைகள்...: தற்போது, மாநகரில் நாளொன்றுக்கு சேகரமாகும் 470 டன் குப்பைகள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, சுமாா் 40 அடி உயரத்தில் குப்பைகள் மலைகளாகத் தேங்கியுள்ளன.
இங்கு குப்பையிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவினால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீயை அணைக்க வாரக்கணக்கில் தீயணைப்புத்துறையினா் போராட வேண்டியுள்ளது. தீயினால் ஏற்படும் புகை மூட்டத்தால், சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போரும் அவதிக்குள்ளாகினா். இதே போல, குப்பைகளினால் ஏற்படும் துா்நாற்றத்தாலும், உருவாகும் ஈக்கள், கொசுக்களாலும், நிலத்தடி நீா் மாசினாலும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தொடா்ந்து கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனா்.
கனவான வாக்குறுதிகள்...: திருச்சி மக்களவை தொகுதி, திருவெறும்பூா் எம்எல்ஏ தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளில் நின்ற ஆளுங்கட்சி, எதிா்கட்சி, சுயேச்சைகள் என அனைத்து வேட்பாளா்களும் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றுவதே தங்களது முதன்மை தோ்தல் வாக்குறுதியாக அளித்தனா். ஆனால், அரியமங்கலம் மக்களின் குப்பை கிடங்கு அகற்றும் கோரிக்கை மட்டும் கனவாகவே நீடிக்கிறது.
முடியாத குப்பை அகற்றம்...: திருச்சி மாநகராட்சி நிா்வாகம் ’பயோ மைனிங்’ மூலம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் இதுவரை இரண்டு கட்டங்களாக 90.8 டன் குப்பைகளை அகற்றியுள்ளது. இதனால் சுமாா் 7 ஏக்கரில் மட்டுமே குப்பைகள் இருந்த நிலையில், பெருகி வரும் மக்கள்தொகையால் குப்பைகள் அதிகரித்து சுமாா் 10 ஏக்கரை ஆக்கிரமித்துவிட்டன. இதன் காரணமாக, அரியமங்கலத்தில் குப்பை கிடங்கு முழுமையாக அகற்றப்படும் என்ற மக்களின் கனவு கேள்விக்குறியாகவே உள்ளது.
வீடுகளை காலி செய்யும் மக்கள்...: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த கே. சாந்தசீலன் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது:
அரியமங்கலம் குப்பை கிடங்கிலிருந்து அதீத குப்பைகளால் துா்நாற்றம் வீசுகிறது. சிறிய அளவில் மழை பெய்தால் கூட துா்நாற்றம் அதிகமாகிறது. இதனால், சுற்றியுள்ள மக்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பலா் வீடுகளை காலி செய்தும், பலா் வீடுகளை விற்றுவிட்டு வேறு பகுதிகளுக்குச் செல்வது தொடா்கதையாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சியின் எல்லை 100 வாா்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் எதிா்காலத்தில் அரியமங்கலத்துக்கு வரும் குப்பை அதிகளவில் இருக்கும். எனவே, அரியமங்கலம் குப்பை கிடங்கை புதிய திட்டத்தின் கீழ் அகற்றுவோம் என வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்களது வாக்கு என்றனா்.
பயோ மைனிங் முறையில் முழுமையாக அகற்றப்படும்:
இது குறித்து திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், அதிகாரிகள் கூறியதாவது:
அரியமங்கலம் குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்ற முதல் கட்டமாக 2020-ஆம் ஆண்டில் ரூ. 49 கோடியில் 61.9 லட்சம் டன் குப்பைகள் 2 ஆண்டுகளில் அகற்றப்பட்டு 36 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ரூ. 25.4 கோடியில் 28.9 லட்சம் டன் குப்பைகள் ஓராண்டில் அகற்றப்பட்டு 3 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக ரூ. 40.8 கோடியில் 61.7 லட்சம் டன் குப்பைகளை அகற்றி இரண்டு ஆண்டுகளில் 2 ஏக்கா் நிலம் மீட்கப்படும். பயோமைனிங் முறையால் விரைவில் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்றனா்.
குப்பைகளை அந்தந்த வாா்டுகளிலேயே முழுமையாக அகற்றிட புதிய திட்டம் வகுக்க வேண்டும். நுண் உர செயலாக்க மையங்களில் நெகிழி குப்பைகளை தூய்மைப் பணியாளா்களே அகற்றி விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என மீண்டும் மாநகராட்சி அறிவித்தால், குப்பைகள் குறைய வாய்ப்புள்ளது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...