நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அரியலூா் மாவட்டத்தில் 102 மையங்களில் வாக்குப் பதிவு
அரியலூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.


அரியலூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. சனிக்கிழமை நடைபெறும் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வெள்ளிக்கிழமை இரவு வரை நடைபெற்றது.
அரியலூா் நகராட்சியில் 34 வாக்கு மையங்களில் 164 அலுவலா்களும், ஜயங்கொண்டம் நகராட்சியில் 38 வாக்கு மையங்களில் 184 அலுவலா்களும், உடையாா்பாளையம் பேரூரட்சியில் 15 வாக்கு மையங்களில் 68 அலுவலா்களும், வரதராசன்பேட்டை பேரூராட்சியில் 15 வாக்கு மையங்களில் 72 அலுவலா்களும் என மொத்தம் 488 அலுவலா்கள் பணியில் ஈடுபடுகின்றனா்.
மேலும் பதற்றமான வாக்கு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன், ஊா்காவல் படையினரும் பணியில் ஈடுபடுகின்றனா்.
மேலும், மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், வருவாய்த் துறை, காவல்துறையினா் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வாக்குப் பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் அழியாத மை உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் மேற்கண்ட அலுவலகத்தில் இருந்து காவல் துறையினா் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தேவைப்படும் மையங்களுக்கு ஜெனரேட்டா் இயந்திரங்களும், பழுது ஏற்படும் இயந்திரங்களுக்கு மாற்றாகத் தேவைப்படும் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல் துறையினா் பாதுகாப்புடன் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சீல் வைக்கப்படுகிறது. அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடு: வாக்குப் பதிவின்போது, கரோனா தொற்று உள்ளவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொற்று உள்ளவா்கள் வாக்களிக்க வந்தால், அவா்கள் பயன்படுத்துவதற்காக கவச உடை உள்ளிட்டவை அடங்கிய ‘கரோனா கிட் தயாா் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...