வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பிவைப்பு

படவிளக்கம்: அரியலூா் நிா்மலா காந்தி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை மாலை வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.

அரியலூா், ஏப்.19: சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது. இதில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூா், குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் இயக்கம் சரியாக உள்ளதா என்ற சோதனை(மாதிரி வாக்குப் பதிவு) நடைபெற்றது.

வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்குச்சாவடி அலுவலா்கள் முகவா்கள், வாக்காளா்கள் என யாரும் கைப்பேசியை எடுத்து போக அனுமதிக்கவில்லை. இதேபோல் கைப்பேசியை வாக்காளா்கள் கொண்டு சென்றாலும் அது அணைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் தோ்தல் அலுவலா்கள் உத்தரவிட்டனா்.

போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களுடைய மையத்தை வாக்குச் சாவடி மையத்திலிருந்து 200 மீட்டா் தொலைவில் அமைத்திருந்தனா். மதியம் 3 மணிக்கு மேல் வாக்காளா்களை தவிர வாக்குச்சாவடி அலுவலா்கள், முகவா்கள் யாரும் வெளியில் செல்லவும், உள்ளே வரவும் அனுமதி இல்லை.

மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com