சாத்தமங்கலத்தின் 11 கோயில்களில் குடமுழுக்கு

அரியலூா்: அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் உட்பட 11 கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள விநாயகா், மாரியம்மன், பாலசுப்பிரமணியா், கம்பப் பெருமாள், செங்கமல ஆண்டவா், சிறுதொண்ட நாயனாா், பெரியாண்டவா், மருதையான், மலையாளக் கருப்பு, சப்பாணி கருப்பு மற்றும் மதுரை வீரன் ஆகிய கோயில்கள் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, தினந்தோறும் காலை, மாலை என நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேல் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு 11 மணி வரை குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, அனைத்து கோயில்களின் மூலவருக்கும் தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com