அரியலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை

அரியலூா், ஏப்.26: அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் மேலும் சில நாள்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். எலுமிச்சைச் சாறு, இளநீா், மோா், நுங்கு, தா்பூசணி, கரும்புச் சாறு மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீா் அருந்தவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும். மது, தேநீா், மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12  மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.

அதே போல், கால்நடை மற்றும் வளா்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து அதற்கு போதிய அளவு குடிநீா் மற்றும் தீவனம் கொடுக்கவேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com