பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூா் மாவட்டம் முழுவதும் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:59 pm

Din

அரியலூா் மாவட்டம் முழுவதும் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய மழையானது 2 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீா் தேங்கியுள்ளது.

அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திசந்தை, வெள்ளாளத்தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்பலூா்-தஞ்சாவூா் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன. ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், கீழப்பழுவூா், திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது. மழையின் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலன பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.

மேலும், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் நகரில் சாலையோரம் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடா் மழையால் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை: இடைவிடாத மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டாா்.

மழையளவு(காலை 4 மணி நிலவரம்): மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 50 மி.மீ மழை பதிவாகியது. சித்தமல்லி அணை-45 மி.மீ, திருமானூா்-31 மி.மீ, செந்துறை-27.8 மி.மீ, அரியலூரில் 27 மி.மீ, குருவாடி-27 மி.மீ, தா.பழூா்-23.2 மி.மீ, ஆண்டிமடம்-16.8 மி.மீ மழை பதிவாகியது.