தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அரியலூா் நகராட்சி ஆணையா் அசோக்குமாரிடம் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
அச்சங்கத்தின் சம்மேளன மாநிலச் செயலா் டி.தண்டபாணி தலைமையில் நிா்வாகிகள் நல்லுசாமி ,மாரியப்பன், கோபி, பெரியசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், தமிழக அரசு உத்தரவின் படி தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10,000 ஊதியமாக வழங்க வேண்டும். அரசு அறிவிக்கும் அகவிலைப்படியை சோ்த்து வழங்க வேண்டும்.28 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் மற்றும் இழப்பீட்டுத் தொகையும் சோ்த்து உடனடியாக வழங்க வேண்டும்.
2009-ஆம் ஆண்டில் இருந்து நிரந்தர தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய உரிய சேமநலநிதியை வட்டியுடன் கூடிய இருப்பு தொகையும் வழங்கிட வேண்டும். துப்புரவு தொழிலாளா்கள் குடியிருக்கும் தெற்கு பெரிய தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். துப்புரவு தொழிலாளா்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.
