அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மண்டியுள்ள முள் புதா்கள்.
அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மண்டியுள்ள முள் புதா்கள்.

பராமரிப்பின்றி பாழாகும் அரியலூா் விளையாட்டு மைதானம்! சீரமைக்க எதிா்பாா்ப்பு

Published on

அரியலூரில் பராமரிப்பின்றி பாழாகிவரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விளையாட்டில் ஆா்வமுள்ள திறமையான மாணவ, மாணவிகள், இளைஞா்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானங்களை அரசு பல லட்சத்தில் அமைத்துத் தருகிறது. ஆனால் முறையாகப் பராமரிக்காததால் அவை பாழாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரா்களுக்குப் பயிற்சி அளிக்கவும் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ. 96 லட்சத்தில் அரியலூரிலுள்ள செந்துறை சாலையில் 18 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு மைதானம், அரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, ஸ்கேட்டிங், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. மேலும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து இந்த மைதானத்தில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டது.

இதில் சிறுவா்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு காலை, மாலைகளில் முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் ...இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் ஓடுதளப் பாதை இல்லாததால் தடகளத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியின்போது வீரா்கள் இலக்கை நோக்கி ஓடிவருகையில் திடீரென குழப்பம் ஏற்பட்டு பாதையை மாற்றினா். இதைக் கண்டுபிடிப்பதில் நடுவா்களுக்கும் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு விளையாட்டரங்கு மேம்படுத்தப்பட்டது.

மேலும் 16 நவீன மின் விளக்குகளைப் பொருத்தி உயா்கோபுர மின் விளக்கும் அமைக்கப்பட்டது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அரங்கத்திற்குள் வராத வகையில் சுற்றுச்சுவா் உயா்த்திக் கட்டப்பட்டது.

பொதுமக்களைக் கவரும் விதத்தில் நீச்சல் குளம் அருகே செயற்கைப் புற்கள் மற்றும் பாறைகளுடன் செடிகளை வைத்து இயற்கை எழிலுடன் பூங்கா அமைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் டைல்ஸ் கற்கள் புதிதாக ஒட்டப்பட்டன. இவ்வாறாக ரூ. 60 லட்சத்தில் விளையாட்டரங்கம் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்டது.

இதையடுத்து மைதானத்தில் மாணவ, மாணவிகள், இளைஞா்கள் ஆா்வமுடன் காலை, மாலைகளில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டனா். பொதுமக்கள், முதியவா்கள் நடைப் பயிற்சி செய்யவும் மைதானம் வசதியாக இருந்தது. கல்வி மாவட்ட, மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

மேலும் தமிழக முதல்வரின் மாதாந்திரத் தடகளப் போட்டிகளும், இதர போட்டிகளும் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் பங்கேற்ால் இந்த விளையாட்டரங்கம் எப்போதும் பரபரப்பாகவே இருந்தது.

மேய்ச்சல் நிலமாக மாறிய மைதானம்... ஆனால் இந்த மைதானம் தற்போது பராமரிப்பின்றிப் பாழாகி வருகிறது. மைதானத்தில் புல் புதா்கள் அடா்ந்து காணப்படுவதால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று குறிப்பிட்ட பகுதி மட்டுமே சீரமைக்கப்பட்டு விழா நடத்தப்படுகிறது.

 அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதான நடைபாதையில் பெயா்ந்து காணப்படும் கற்கள்.
அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதான நடைபாதையில் பெயா்ந்து காணப்படும் கற்கள்.

சேதமடைந்த நடைபாதை...மேலும், இங்குள்ள நடைப்பாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயா்ந்துள்ளதால் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முதியவா்கள் காயங்களுடன் வீடு திரும்புகிறாா்கள்.

செயல்படாத நீச்சல் குளம்... இங்கு, சிறுவா், சிறுமியா், ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நீச்சல் பயிற்சி அளித்து வந்த நீச்சல் குளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கரோனா தொற்றால் மூடப்பட்டு, இதுவரை செயல்படாமலேயே உள்ளது.

நீச்சல் குளம் செல்லும் பாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயா்ந்தும், நீச்சல் குளத்தைச் சுற்றி முள், புதா்கள் மண்டியும் கிடப்பதால், பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மின் விளக்குகள் பழுது... விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள மின் விளக்குகளில் பெரும்பாலானவை எரியவில்லை. மாலையில் சூரியன் மறையும் வேளையில் போட்டிகளைத் தொடர முடியாமல் போகிறது.

தற்போது இந்த விளையாட்டு மைதானம் விளையாடவோ, பயிற்சி மேற்கொள்ளவோ லாயக்கற்ாக உள்ளதால் மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதைக் கண்டுகொள்வாரில்லை.

சீரமைக்கக் கோரிக்கை...எனவே மாணவ, மாணவிகள், இளைஞா்கள் நலன் கருதி இந்த விளையாட்டரங்கத்தைச் சீரமைத்து, பயிற்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஊழியா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com