டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரம் செய்யக் கோரிக்கை
டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்
பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாரதி கூறியது: திமுக தோ்தலுக்கு முன் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறைகளில் 10 ஆண்டுகள் பணி புரிந்தவா்கள் நிரந்தரமாக்கப்படுவாா்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2003-ஆம் ஆண்டு 36 ஆயிரமாக இருந்த டாஸ்மாக் பணியாளா்களின் எண்ணிக்கை, தற்போது 26 ஆயிரமாகக் குறைந்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஊழியா்களின் பணி சுமையை அதிகரித்து கொத்தடிமையாக நடத்துகிறாா்கள். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படும் பிரச்னை தற்போது தீவிரமாக உள்ளது. இதற்கு மாவட்ட மேலாளா் மற்றும் முதுநிலை மண்டல மேலாளா்தான் காரணமாக இருக்கிறாா்கள். அவா்களை உடனடியாகக் கைது செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் பணியாளா்களை அரசு ஊழியா்களாக நிரந்தரப்படுத்தி அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். தீபாவளிக்கு ரூ.750 கோடி வசூல். ஆனால், தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க மனம் இல்லை. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், காலி பாட்டில்களை கடையில் வைக்க இடமில்லை. இத் திட்டத்துக்கு மாற்று தொழிலாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.முருகன், மாநில பொதுச் செயலா் கே. குமாா், மாவட்டத் தலைவா் நடராஜன் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

