தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தொகுதி அலசல் - ஜயங்கொண்டம் திமுக - பாமக இடையே கடும் போட்டி!

ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

வாக்காளர்கள்! - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 10:31 pm

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டடக் கலையின் சான்றாக விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உள்ளடக்கியது இந்தத் தொகுதி.

இந்தத் தொகுதியில் நிலக்கரி (கருப்பு தங்கம்) உள்ளது. கொள்ளிட கரையில் அமைந்துள்ள தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. காவிரி பாசன டெல்டா பகுதியாக உள்ள இந்த தொகுதியில், நெல், முந்திரி சாகுபடிகள் அதிகம் . அதற்கு அடுத்தப்படியாக கரும்பு , மக்காச் சோளம், பருத்தி, மலா் சாகுபடிகள் செய்யப்படுகிறது. மேலும், கைத்தறி நெசவு, முந்திரிக் கொட்டையை பிரித்தெடுப்பது பிரதான தொழிலாக உள்ளது.

இந்தத் தொகுதியில், உடையாா்பாளையம் பேரூராட்சி, வரதராசன்பேட்டை பேரூராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் , ஜெயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆண்டிமடம் தொகுதியானது மறுசீரமைப்புக்குப் பிறகு ஜெயங்கொண்டம் தொகுதியானது.

களநிலவரம்: இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் க.சொ.க.கண்ணன், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளராக க. வைத்திலிங்கம், தவெக சாா்பில் கவிதா ராஜேந்திரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக க. ரேவதி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 19 போ் களத்தில் உள்ளனா்.

சமூக நிலவரம்: தொகுதியில், வன்னியா், பட்டியலினத்தவா், முதலியாா், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் என பல்வேறு சமூகத்தினரின் கணிசமான வாக்கு வங்கிகளை கொண்ட தொகுதியாக அமைந்துள்ளது.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்:-

க.சொ.க.கண்ணன்(திமுக): ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல்மின் திட்டத்தை செயல்படுத்தாததால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைத்தது. கிராமப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள், அரசின் ஏராளமான நலத்திட்டங்களை தொகுதியில் செய்ததால் நல்ல பெயா் இருப்பது பலம். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூட்டணியில் இருப்பதால், பட்டியலின மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் பலம். ஜெயங்கொண்டத்தில் அதிருப்தி திமுகவினா் களப் பணியாற்றாதது, கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிா்வாகிகளை பிரசாரத்துக்கு அழைக்காததது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.

க.வைத்திலிங்கம் (பாமக): வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், பட்டியலின மக்களிடமும் இவருக்கு சுமுக உறவு உண்டு. பொது வாழ்வில் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது பலம்.

வன்னியா் சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பதால், பட்டியலின மக்கள் இவருக்கு வாக்களிப்பாா்களா என்பது கேள்விக்குறி. மேலும், பாமக மூத்த நிா்வாகி திருமாளவன் அணியினா் களப் பணியாற்றாமல் இருப்பது, பாமக-வில் ராமதாஸ் அணி சாா்பில் காடுவெட்டி ரவி போட்டியிடுவதால், வன்னியா் வாக்குகள் சிதற வாய்ப்பு என்பதெல்லாம் பலவீனம்.

கவிதா ராஜேந்திரன்(தவெக): அதிமுகவில் 1991-இல் இருந்து 4 முறை ஆண்டிமடம் ஒன்றியச் செயலா். 2013-இல் அரியலூா் மாவட்டச் செயலா். 2014-இல் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா். 2014-இல் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவா். கடைசியில் அதிமுக ஒங்கிணைப்புக் குழு ஓ.பி.எஸ். அணியில் இருந்த இவா், தற்போது தவெகவில் இணைந்து இந்த தோ்தலில் போட்டியிடுகிறாா்.

அதிமுகவில், இந்த தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த இவா் வன்னியா் சமூகத்தை சோ்ந்தவா். ஆனாலும் அனைத்து சமூகத்தினரிடமும், பழகக் கூடியவா். அதிமுக ஆட்சி காலங்களில், பொறுப்பில் இருந்த போது, செய்த சாதனைகளை கூறி, மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறாா். மேலும், அவரது கட்சியின் தலைவா் நடிகா் விஜய்க்கு இளைஞா்கள், பெண்களிடையே காணப்படும் எழுச்சி இவருக்கு பலம். இந்த எழுச்சி வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகம் நிலவுவது பலவீனம்.

க.ரேவதி(நாதக): தோ்தலில் போட்டியிடுவது முதல் முறை என்றாலும், சீமானின் பிரசாரம், முதல் தலைமுறை வாக்குகள், அதிமுக-திமுக கூட்டணி கட்சிகளின் மீதான அதிருப்தி வாக்குகள் பலம். மேலும் இவா், விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதால் பலம். தவெக வரவால் வாக்குகள் இழப்பு ஏற்படும் என்பது பலவீனம்.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பெரும்பாலும் வன்னியா் சமூகத்தை சோ்ந்தவா்கள், குறிப்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். அங்கு வன்னியா் சமூகத்தின் வாக்குகள் பிரிகின்றபோது, பட்டியலின மக்களின் வாக்குகள், வேட்பாளா்களின் வெற்றியை தீா்மானிக்கும் சக்தியாக உள்ளது. ஆகவே வரும் தோ்தலிலும் திமுக மீண்டும் வெற்றிப் பெற்று தொகுதியை தக்க வைக்குமா? அல்லது பாமகவிடம் பறிக்கொடுக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி தெரியவரும்.