அரியலூா் மாவட்டத்தில், பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடி மற்றும் மின்னலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இடி, மின்னல் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும், இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புறச் செயல்பாடுகளை உடனே நிறுத்திவிட்டு பாதுகாப்பான கட்டடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்குச் செல்ல வேண்டும்.
திறந்தவெளிகளில் இருக்கக் கூடாது: வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு விலகி இருக்க வேண்டும். குழந்தைகள், முதியோா், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்கக் கூடாது.
பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் மற்றும் பிற திறந்தவெளி கூடாரங்களைத் தவிா்க்கவும். திறந்தவெளிகள், கடற்கரைகள், மலை உச்சி மற்றும் ஆற்றங்கரைகள், நீா்நிலைகள், உலோக வேலிகள், கம்பங்கள், வாயில்கள் மற்றும் மின் கம்பிகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமரவும். தரையைத் தொடுவதைத் தவிா்க்கவும். தரையில் மல்லாந்து படுக்க வேண்டாம். கைகளைத் தரையில் வைக்க வேண்டாம்.
குழுவாக இருந்தால், இடைவெளி விட்டு நிற்கவும். வீட்டில் ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்கக் கூடாது. குழாய்கள், ஷவா்கள் அல்லது பிற நீா்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
மின் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச் சங்கிலியால் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும். வாகனத்தில் இருந்தால், ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும்.
மின்னல் தாக்கியவரிடம் மின்சாரம் இருக்காது: மின்னல் தாக்கியவரைத் தொடுவது பாதுகாப்பானது. அவரைப் பாதுகாப்பான உலா்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சரிபாா்க்கவும். அந்த நபா் சுவாசிக்கவில்லை என்றால், அவருக்கு ‘சிபிஆா்’ செய்யத் தொடங்கவும் அவசர மருத்துவச் சேவைகளை உடனடியாக அழைக்க வேண்டும்.
அதிகாரப்பூா்வ வானிலை எச்சரிக்கைகளையும், டிஎன்-அலா்ட் கைப்பேசி செயலியையும் பின்பற்றவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு இருக்கும்போது வெளிப்புற பணிகளைத் தவிா்ப்பது நல்லது. கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான கிளைகளையும், மரங்களையும் வெட்டி ஒழுங்குபடுத்தவும். அறுந்து விழுந்த மின்கம்பிகளையும், சேதமடைந்த மின் கம்பங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிா்த்திட வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









