எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அரசின் சேவைகள், திட்டங்கள் குறித்த காலத்தில் பொதுமக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சா் அறிவுறுத்தல்

அரசின் சேவைகள், திட்டங்கள் குறித்த காலத்தில் பொதுமக்களை சென்றடைய வேண்டும்

News image

வாலாஜா நகரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு தோழி விடுதிகள் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா். உடன் ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 12:48 am IST

அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான ப. ராஜ்குமாா்.

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் பேசியதாவது:

அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்ப்பதில் அலுவலா்களின் பங்கு இன்றியமையாதது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அரசு அலுவலா்கள் செயல்பட வேண்டும்.

அரியலூா் மாவட்டமானது சிமெண்ட் ஆலைகள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை ஈா்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமப்புற மற்றும் நகா்ப்புற வளா்ச்சியை சமநிலையில் முன்னெடுக்க வேண்டும்.

அரியலூா் மாவட்டம் சாலை விபத்தில் 5-ஆவது இடம் வகிப்பதால், சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, சாலை பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். மேலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்றி அரியலூா் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

நலத் திட்ட உதவிகள்: முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,03,889 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், வாலாஜா நகரம் ஊராட்சியில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அரசு தோழி விடுதிகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை, எஞ்சியுள்ள பணிகளின் விவரம், கட்டுமானப் பொருள்களின் தரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, கூட்டத்துக்கு ஆட்சியா் ந.மிருணாளினி முன்னிலை வகித்தாா். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க. வைத்திலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்ஆ.ரா.சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் பிரேமி, உடையாா்பாளையம் மனோகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.