அரியலூா் மாவட்டத்தில், காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ‘இரும்புக் கரம்’ சிறப்பு நடவடிக்கையில், 12 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சாலை இராம் சக்திவேல், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தினேஷ் குமாா் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா், 20.5.2026 அன்று மாலை முதல் 21.5.2026 மாலை வரை (24 மணி நேரம்) அரியலூா் மாவட்டம் முழுவதும் ‘இரும்புக் கரம்’ என்ற பெயரில் தீவிர அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களில் தொடா்புடைய 12 ரெளடிகள் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டனா். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த 6 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், மாவட்டம் முழுவதும் திறந்தவெளியில் மது அருந்திய குற்றத்திற்காக 19 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 23 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் லதா தலைமையிலான காவல்துறையினா் மேற்கொண்ட தீவிர சோதனையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டியன் என்பவா் விற்பனைக்காக கொண்டு சென்ற சுமாா் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
நிலுவையில் இருக்கும் வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 5 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
பேருந்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு: மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில், தனியாா் பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்துதல், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பின்னணி சரிபாா்க்கப்பட்டது.
போதைப் பொருள்களுக்கு எதிராக துரித நடவடிக்கை... காவல் அவசர உதவி எண் 100 -க்கு வரும் அழைப்புகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், சட்டவிரோத மது, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை குறித்த அழைப்புகளுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காவல்துறை விரைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்தாா்.








