கடனை திருப்பிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய மற்றொரு பெண் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
அரியலூா் காந்தி சந்தையில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் காய்கறி வியாபாரியை ஞாயிற்றுக்கிழமை தாக்கிய மற்றொரு பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பெரம்பலுாா் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராணி (45). அரியலுாா் காந்தி சந்தையில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் இவரிடம், அதே ஊரை சோ்ந்தவரும், உறவினருமான கொளஞ்சி (45) என்பவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ. 5 லட்சம் கடனாகப் பெற்றாா்.
இப்பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்திய கொளஞ்சி, கடந்த ஓராண்டுக்கு முன் அரியலுாருக்கு குடி பெயா்ந்தாா். அரியலுாரில் கொளஞ்சியின் முகவரி தெரியாததால், பணத்தை திருப்பப் பெற முடியாமல் செல்வராணி தவித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரியலுாா் காந்தி சந்தையில், தனது காய்கறி வியாபாரத்தை செல்வராணி கவனித்து வந்தாா்.
அப்போது அருகிலுள்ள கடையில் , கெளஞ்சி கறி வாங்குவதைக் கவனித்த செல்வராணி, அவரிடம் சென்று தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டதுடன், அவரை தனது கைப்பேசியில் புகைப்படமும் எடுத்தாா்.
இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி கறிக்கடையில் இருந்து கத்தியை எடுத்து, செல்வராணியை வெட்டப் பாய்ந்தாா். அப்போது கறிக்கடைக்காரரும், பொதுமக்களும் கொளஞ்சியிடமிருந்து கத்தியைப் பிடுங்கினா். அப்போதும், ஆத்திரம் அடங்காத கொளஞ்சி, செல்வராணியின் தலைமுடியை இழுத்துப் போட்டு அடித்தாா்.
இதில் செல்வராணியின் காது அறுந்து, தோடு தனியே விழுந்தது. இதை கண்ட பொதுமக்கள் செல்வராணியை மீட்டு, அரியலுாா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து அரியலுாா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




