உத்திரபிரதேசத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் 100 விவசாயிகளுக்கு முதல் தவணை நிதிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியது: இத்திட்டத்தின் நோக்கமானது சிறு குறு விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் அவர்களது வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே ஆகும்.
சிறு குறு விவசாயிகள் குடும்பம் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுதோரும் ரூ.6000 என மூன்று சம தவணைகளில், ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2000 (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) வழங்கும் திட்டமாகும்.
முதல் தவணையானது 2018-19 ம் நிதியாண்டின் அடிப்படையில் 1.12.2018 முதல் 31.3.2019 வரையிலான காலாண்டிற்கு ரூ.2000 வழங்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் இரண்டு ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 1,08,636 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் 40,278 விவசாயிகள் தகுதியுடைய பயனாளிகளாக தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கரூர் தாலுகாவில் 4,056 பயனாளிகள், அரவக்குறிச்சி தாலுகாவில் 6,424 பயனாளிகள், மண்மங்கலம் தாலுகாவில் 7,284 பயனாளிகள், குளித்தலை தாலுகாவில் 8,435 பயனாளிகள், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 7,781 பயனாளிகள் மற்றும் கடவூர் தாலுகாவில் 6,298 பயனாளிகள் தற்போது வரை இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் முதல் தவணை நிதியானது தற்போது முதல் வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்றைய நிகழ்ச்சியில் 100 விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் கு. சரவணமூர்த்தி,
எம். லியாகத், வேளாண் துறை இணை இயக்குநர் ஜெயந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன்ராம், உதவி இயக்குநர் கலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







