கரூர்: அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்றார் முன்னாள் தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வளையப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். விழாவில் பாப்பாசுந்தரம் சிலையை திறந்து முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகையில்,
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலேயே இருந்து கட்சிக்காக உழைத்தவர் பாப்பாசுந்தரம். 1989-ல் கட்சி இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா தலைமையேற்று இதே தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாப்பாசுந்தரம். 2002-ல் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சராகவும் இருந்தவர். மக்களுக்காக உழைத்தவர். அதிமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் கிடையாது. கட்சியில் விசுவாசமாக இருந்து, மக்கள் பணியை சிறப்பாக செய்பவர்கள் உயரமான இடத்திற்கு வருவார்கள் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் பாப்பாசுந்தரம்.
அவரது சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். அதிமுகவைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால்தான் யாராலையும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடிவதில்லை. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தனர்.
இதனால்தான் இன்றைக்கும் அதிமுக உயிரோட்டம் கொண்ட இயக்கமாக திகழ்கிறது. இந்த இயக்கத்தை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள். உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். அவரது ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்தார். அப்போது இந்தியாவிலேயே தமிழகம் வளர்ச்சி பெற்று, பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கண்டது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சர்வதிகாரத்தை ஒழித்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.
நான் முதல்வராக இருந்தபோது, பொங்கல் தொகுப்புக் கொடுத்தோம், இன்றைக்கும் பொங்கல் தொகுப்பு கொடுத்தது பற்றி உங்களுக்கு தெரியும். அதிமுகவில் கொண்டு வந்த திட்டங்களுக்குத்தான் திமுகவினர் பெயர் வைக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்று 11 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர். இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.
அதிமுக ஆட்சியில் அரசு வழியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்ததன் மூலம் குடிசையில் வாழும் ஏழைத்தொழிலாளியின் குழந்தைக்கூட மருத்துவம் படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அடித்தட்டு மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக நான் சட்டம் கொண்டுவரும் முன் 3147 மருத்துவக் கல்லூரிக்கான இடத்தில் தமிழக மாணவர்களுக்கு வெறும் 9 பேருக்கு மட்டுமே மருத்துவக்கல்விக்கு இடம் கிடைத்தது.
இப்போது 500-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்கிறது. இதுதான் சாதனை. காவிரி-வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் கொண்டு வந்தோம். மூன்று தடுப்பணைகள் கொண்டுவந்த திட்டத்தை ஆளுங்கட்சியினர் கைவிட்டுவிட்டனர். குடிமராமத்து திட்டத்தில் கோடைகாலத்தில் ஏரி, குளம் சீரமைத்து மழைக்காலங்களில் மழைநீரை சேமித்தோம். நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்து விவசாயிகளிடம் நெல்பெற்றோம்.
இப்போதைய ஆட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழைக்கு சேதமாகின. இந்த நெல்லைக்கூட கொள்முதல் செய்ய இயலாத அரசாக திமுக அரசு உள்ளது. மக்களுக்கு சிறப்பான திட்டங்களை இந்த அரசால் கொடுக்க முடியாது.
தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். அதிமுகவின் சிறப்புத்திட்டங்களையெல்லாம் திமுக அரசு புறக்கணித்துவிட்டது என்றார் அவர்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.