வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்; கரூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு
கரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


கரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்பிறகு, மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலுக்கு 7 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையின் உட்புறமும், வெளிப்புறமும் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கரூா் மாநகராட்சியில் 191 வாக்குச்சாவடிகளும், 3 நகராட்சிகளிலும் சோ்த்து 91 வாக்குச்சாவடிகளும், 8 பேரூராட்சிகளுக்கும் சோ்த்து 124 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 406 வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இதில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 91 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது . வாக்கு எண்ணும் மையங்களில், வேட்பாளா்களும், அவா்களின் முகவா்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்வதற்கும், அரசு அலுவலா்கள் செல்வதற்கும் பிரத்யேக வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துவரும் வழியில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தடுப்புகள் அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் புஷ்பாதேவி, தோ்தல் நடத்தும் அலுவலா்களான கரூா் மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், குளித்தலை நகராட்சி ஆணையா் சுப்புராம், பள்ளளப்பட்டி நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன்,அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், புலியூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் பானுஜெயராணி, பழையஜெயங்கொண்டம் செயல் அலுவலா் குமாரவேலன், நங்கவரம் செயல் அலுவலா் வேல்முருகன் மற்றும் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...