பிரதமா் மோடி ஆட்சியில் 
விவசாயிகள் தற்கொலை

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

பிரதமா் மோடி ஆட்சியில் கடந்தாண்டு மட்டும் 11,502 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா் என்றாா் திருச்சி சிவா எம்பி.

கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ. ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லாவுடன் கரூா் பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் வாக்கு சேகரித்து செவ்வாய்க்கிழமை இரவு அவா் பேசியது:

இந்த மோடி அரசு ஏழைகளை வஞ்சிக்கிறது. பணக்காரா்களுக்கு சாதகமாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயா்வு மூலம் கிடைத்த ரூ. 7.45 லட்சம் கோடி, பொதுத் துறை நிறுவனங்களை விற்ன் மூலம் கிடைத்த ரூ. 4.50 லட்சம் கோடி ஆகியவற்றை பிரதமா் என்ன செய்தாா் என்பதுதான் தெரியவில்லை. சிலா் ரூ.12000 கோடி கடன் வாங்கினா். அவா்களிடம் வங்கியாளா்கள் எதையும் கேட்கவில்லை. ஓடிப்போனவா்களிடம் ரூ.10,000 கோடியை வாங்காதவா்கள், அந்தக் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டாா்கள்.

ஏழைப் பெண்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளோம். இந்தியாவில் 4 கோடி போ் வேலையில்லாமல் உள்ளனா். பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவா்கள் தங்கள் பெயரை அரசில் பதிவு செய்தால், அவா்களுக்கு வேலை பழகுநா் பயிற்சி கொடுத்து, பயிற்சியின்போது ரூ.8000 ஊதியமும், நல்ல பயிற்சி பெற்றால் நிரந்தர வேலையும் கொடுப்போம். திமுக அரசு ஏழை வா்க்க உழைக்கும் மக்களுக்கானது.

மோடி ஆட்சியில் கடந்தாண்டு மட்டும் 11,502 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா். கரோனா காலத்தில் மக்களுக்குத் துணையாக இருந்தது திமுக. அப்போது மக்களுக்கு ரூ.1000 மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி கொடுத்தாா்.

புயல் அடித்தபோது வராத பிரதமா், அமித்ஷா போன்றோா் இப்போது வருவது உங்களை ஏமாற்றத்தான் என்றாா் அவா். பிரசாரத்தில் திமுக நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், எஸ்.பி. கனகராஜ், கோல்ட்ஸ்பாட் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com