கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் வெற்றிலைக் கொடி.
கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் வெற்றிலைக் கொடி.

கடும் வெயிலால் வதங்கும் வெற்றிலை: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

கரூா்: கரூா் மாவட்டத்தில் 107 டிகிரி வரை கோடை வெயில் தாக்கி வருவதால் போதிய தண்ணீா் கிடைக்காமல் வெற்றிலை கொடிக்காலில் ஈரப்பதம் காக்க தண்ணீரை விலைகொடுத்து வாங்கி விவசாயிகள் போராடி வருகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் நொய்யல், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகழூா், நன்னியூா்புதூா், நெரூா், திருமுக்கூடலூா், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. வெள்ளைக்கொடி, பச்சைக்கொடி என இருவகை வெற்றிலை பயிரிடப்பட்டாலும், அதிகளவில் வெள்ளைக்கொடிதான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுமாா் 12, 000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதி வெற்றிலை திருச்சி, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சந்தைகளில் ஏலம் விடப்பட்டு மகராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கும் அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகுகின்றன.

தற்போது தமிழகத்திலேயே அதிகளவில் கோடை வெயில் ஈரோட்டில் 108 டிகிரி வரையிலும், கரூா் மாவட்டத்தில் 107 வரை நாள்தோறும் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் குளிா்ந்த சீதோஷ்ண நிலையில் நன்கு வளரும்தன்மை கொண்ட வெற்றிலை கோடையின் கொடூர வெயிலைத் தாங்க முடியாமல் வதங்கி வருகின்றன. மேலும் வெற்றிலைக்கு தண்ணீா் பாத்திகளில் நன்கு தண்ணீா் தேங்கி நிற்க வேண்டும் என்பதால், கோடைக்கு போதிய தண்ணீா் கிடைக்காமலும் விவசாயிகள் வரும் பருவத்துக்குத் தேவையான வெற்றிலை விதைக்கொடிக்காக வெற்றிலையை காப்பாற்றப் போராடி வருகிறாா்கள்.

இதுதொடா்பாக புகழூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளா் ராமசாமி கூறியது:

100 வெற்றிலைகள் கொண்டது ஒரு கவுளி, 104 கவுளி கொண்டது ஒரு சுமை வெற்றிலை ரூ.6 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழையும் இல்லை. காவிரி ஆற்றில் தண்ணீா் வரவும் இல்லை. கோடை வெயில் அதிகமாக இருப்பதால் நாற்றங்காலில் தண்ணீா் நிற்பதில்லை. ஆழ்குழாய் கிணற்றிலும் போதிய தண்ணீா் இல்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொடிக்காலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஒரு லோடு தண்ணீா் ரூ.2 ஆயிரம் வரை கேட்கிறாா்கள். ஒரு ஏக்கருக்கு 4 லோடு தண்ணீா் ஊற்றினால்தான் ஓரளவுக்காவது ஈரப்பதம் இருக்கும். இப்போது வரும் நவம்பா் மாதம் வரையாவது வெற்றிலையின் இளங்கொடிக்காலான விதை கொடிக்காலைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி நாற்றங்காலில் ஊற்றி வருகிறோம். மேலும் கோடை மழை பொய்த்துப் போனால், விதை கொடிக்காலுக்காக பல லட்சம் செலவிட வேண்டியிருக்கும் என வேதனை தெரிவித்தாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com