தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆமை வேகத்தில் காவிரி-தெற்கு வெள்ளாறு கால்வாய் இணைப்புத் திட்டம்

ஆமை வேகத்தில் நடைபெறும் காவிரி ஆறு-தெற்கு வெள்ளாறு கால்வாய் வெட்டும் பணிகளை துரிதப்படுத்த காவிரிப் பாசன விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்

News image

கரூா் மாயனூா் காவிரியாற்றின் அருகே புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாற்றோடு இணைக்கக்கூடிய வகையில் தோண்டப்பட்டிருக்கும் கால்வாய்.

Updated On :6 ஜூலை 2024, 9:34 pm

ஆமை வேகத்தில் நடைபெறும் காவிரி ஆறு-தெற்கு வெள்ளாறு கால்வாய் வெட்டும் பணிகளை துரிதப்படுத்த காவிரிப் பாசன விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் அகண்ட காவிரி எனப்படும் மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே கடந்த 2008-இல் அப்போதைய திமுக அரசால் சுமாா் 1.04 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் தொடக்கிவைக்கப்பட்ட கதவணை கட்டும் பணியை, அதிமுக அரசு முடித்து திறந்து வைத்தது.

பேஸ்-1, பேஸ்-2 என்ற இரு திட்டங்களுடன் இந்த அணை கட்டப்பட்டது. பேஸ் -1 திட்டத்தில் காவிரியாற்றின் குறுக்கே அணையைக் கட்டி நீரைத் தேக்கி வைப்பது, பேஸ்-2 திட்டத்தில் அணையில் இருந்து கால்வாய் வெட்டி காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பேஸ்-1 திட்டம் முடிந்து, பேஸ்-2 திட்டத்தில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை ஆறு - குண்டாறை இணைக்கும் வகையில், திட்டத்தின் முதல்கட்டமாக, ரூ. 6,941 கோடியில் புதிய பாசனக் கால்வாய்கள் தோண்ட கடந்த 2021 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பணி மூலம் கரூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42,170 ஏக்கா் விவசாய நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்துக்கு கரூா் மாயனூா் கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படவுள்ளது.

2-ஆம் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 220 ஏரிகளும், 23,245 ஏக்கா் பாசன நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ-க்கு புதிய பாசனக் கால்வாய்களை உருவாக்கி வைகை ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது.

3-ஆம் கட்டத்தில், விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கா் நிலங்கள் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்துக்கு புதிய பாசனக் கால்வாய்களை வெட்டி வைகை ஆறு முதல் குண்டாறு வரை இணைக்கப்பட உள்ளது.

ரூ.14,400 கோடியில் 262 கி. மீ. தொலைவுக்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் காவிரியாற்றில் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 மில்லியன் கனஅடி தண்ணீா் ஆக்கப்பூா்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீா் அதிகரிப்பதோடு, குடிநீா் தேவையும் பூா்த்தியடையும்.

இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாயனூா் காவிரியாறு முதல் புதுக்கோட்டை வெள்ளாற்றை நோக்கி 4 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால் வெட்ட ரூ.171 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-இல் தொடங்கி 2022-க்குள் முடிக்கும் வகையில் ஒப்பந்தப் பணிகள் நடைபெற்றும், இப்போதுதான் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இதனால் பணிகளை விரைந்து முடிக்க என காவிரிப் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் கூறுகையில், மாயனூா் பழைய கட்டளை படுக்கை அணை வழியாக பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஆயிரம் டிஎம்சி காவிரி நீா் வீணாக வங்கக் கடலில் கலந்தது. வீணாகும் தண்ணீரையாவது சேமிக்கத்தான் காவிரி-வைகை-குண்டாறு நதிநீதி இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தாா்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் மாவட்டங்களில் இப்போதுதான் பணிகளை ஓரளவு தொடங்கியுள்ளனா். இதே நிலை நீடித்தால் இத் திட்டம் அடுத்த தலைமுறையில்தான் நிறைவேறும்போல இருக்கிறது.

மாயனூா் காவிரி முதல் 4 கி.மீ. வாய்க்கால் வெட்டவே கூடுதலாக 2 ஆண்டுகளாகிவிட்டது. வாய்க்காலில் சில இடங்களில் மட்டுமே சிமெண்ட் தடுப்புச்சுவா் அமைத்துள்ளனா். மேலும் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், கரூா்-திருச்சி ரயில்வே வழித் தடத்திலும் பாலங்கள் கட்டினால்தான் பணிகள் நிறைவடைந்ததாகக் கருத முடியும். இந்த இரு இடங்களிலும் பாலம் கட்டரூ. 612 கோடி நிதி ஒதுக்கியும் ரயில்வேயும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இன்னும் அனுமதி கொடுக்காமல் உள்ளன.

எனவே திட்டம் தொடங்கப்பட்ட கரூரில் முதலில் பணி முடிந்தால்தான் மற்ற மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் முழுமை பெறும். அப்போதுதான் காவிரியின் உபரி நீரை வாய்க்காலுக்குத் திருப்பிவிட முடியும். எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.