முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை பிடிக்க கூடுதலாக 2 தனிப்படைகள் அமைப்பு
நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கூடுதலாக 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனா்.
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள தனது 22 ஏக்கா் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்து மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மீது கரூரைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் கடந்த இரு வாரங்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்திருந்தாா்.
இந்த வழக்குத் தொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தாா்.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை பிடிக்க கடந்த இருதினங்களுக்கு முன் கரூா் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளா் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கூடுதலாக இரண்டு தனிப்படை அமைத்து வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்ாக கூறப்படும் எம்.ஆா். விஜயபாஸ்கரை தேடிவருகின்றனா் என சிபிசிஐடி போலீஸாா் ஒருவா் தெரிவித்தாா்.

