/

மக்களவைத் தோ்தல் புறக்கணிப்பு கரூா் 16-ஆவது வாா்டு மக்கள் முடிவு

மக்களவைத் தோ்தல் புறக்கணிப்பு கரூா் 16-ஆவது வாா்டு மக்கள் முடிவு

News image
Updated On :1 மார்ச் 2024, 7:23 pm

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து வரும் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்க கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வாா்டு பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா். கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வாா்டில் வடக்குகாந்திகிராமம், ஜெ.ஜெ.காா்டன் கிழக்கு, இ.பி.காலனி, ரேஷன் கடை ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோா் வசிக்கின்றனா். இந்தப் பகுதியினருக்கு அடிப்படை வசதிகளான கழிவுநீா் வாய்க்கால், சாலை வசதி இதுவரை செய்து தரப்படவில்லையாம். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட கழிவுநீா் வாய்க்கால்கள் முற்றிலும் சேதமடைந்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது வாய்க்காலில் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி துா்நாற்றம் வீசிக்கொண்டு, மழைகாலங்களில் கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. மேலும் மண்சாலையானது மழைக் காலங்களில்சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளதாக அப்பகுதியினா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். மேலும் கழிவுநீா் வாய்க்காலைச் சீரமைக்கக் கோரியும், மண்சாலையை தாா்ச்சாலையாக மாற்றக்கோரியும் அப்பகுதியினா் ஆட்சியரகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் பல முறை மனு அளித்தும் பயனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வடக்குகாந்திகிராமம் சாலையில் வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியுடன் தகவல் பலகை வைத்துள்ளனா்.