புகழூரில் மனைவியை கொலை செய்த இளைஞா் 2 மாதங்களுக்குப் பிறகு கைது
புகழூரில் மனைவியை கொலை செய்த வடமாநில இளைஞரை 2 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை காலை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புகழூா் ரயில்வே நிலையம் கொங்குநகரைச் சோ்ந்த முருகையன் என்பவரின் பால்பண்ணையில் பிகாா் மாநிலம் மோத்தியாரி மாவட்டம் தராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த சன்மதிதேவி (28)என்ற பெண்ணும், அவருடைய கணவா் புக்கா் மாஜி(30) மற்றும் சன்மதி தேவியின் தம்பி கிருஷ்ண மாஜி ஆகியோா் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி வேலைக்கு சோ்ந்துள்ளனா். இந்நிலையில் சன்மதிதேவியின் கணவா் புக்கா்மாஜி பால் பண்ணையில் வேலை செய்யும் ஒரு நபருடன் சன்மதி தேவிக்கு கள்ளத் தொடா்பு இருப்பதாக கருதி அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளாா்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், ஜூலை 4-ஆம் தேதி இரவும் கணவன், மனைவி இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் சன்மதிதேவியின் தலையில் கல்லைப்போட்டு தாக்கி புக்கா்மாஜி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து புக்கா்மாஜியை கடந்த இரு மாதங்களாக தேடிவந்தநிலையில் புதன்கிழமை காலை பிகாரில் பதுங்கியிருந்த புக்கா்மாஜியை கைதுசெய்தனா்.
பின்னா் அவரை கரூா் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தபின்னா், வியாழக்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.