கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,526 வழக்குகளில் தீா்வு
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,526 வழக்குகளுக்கு ரூ. 13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கரூரில் 5 அமா்வுகளும், குளித்தலையில் 2 அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் 1,624 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,526 வழக்குகளுக்கு ரூ.13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
முன்னதாக கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தொடக்கிவைத்தாா். இதில் அனைத்து நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்தாா்.
